ஐ.பி.ல் கிரிக்கெட் தொடரின் 39 வது போட்டியாக இடம்பெற்ற சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டியில் 06 விக்கெட்டுக்களால் லக்னோ சுப்பர் ஜயன்ட் அணி சென்னை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
ஐபில் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான முக்கியதுவம் வாய்ந்த போட்டி சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னோ அணி களத்தடுப்பை தேர்வு செய்ததையடுத்து முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 04 விக்கட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணியின் தலைவர் ருத்ராஜ் கெய்க்வாட் சதம் கடந்து 108 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
சிவம் டுபே 27 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
லக்னோ அணி சார்பில் ஹென்றி, மொஹ்சின், தாகுர் ஆகியோர் தலா 1 விக்கட்டினை கைப்பற்றியிருந்தனர்.
211 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
பெரிதும் எதிர்பார்க்கபட்ட டி கொக் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்த நிலையில், அணித்தலைவர் கே.எல் ராகுல் 16 ஓட்டங்களுடன் வெளியேற, அடுத்ததாக களமிறங்கிய மார்க்கஸ் அதிரடித் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.
இறுதியில் லக்னோ சுப்பர் ஜயன்ட் அணி 19.3 ஓவ்ர்களில் 04 விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பில் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டமிழக்காமல் 124 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு, போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 04ம் இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.