பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 600 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான போதைப்பொருளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது இலங்கைப் பெறுமதியில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் இந்திய கடலோர பொலிஸார், அரேபிக் கடல் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த படகு ஒன்றை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போதே 600 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அல் ராசா என்ற கப்பல் மூலம் கடத்தப்பட்விருந்த இந்த போதைப்பொருளுடன், 14 பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய கடலோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மேலதிக விசாரணைக்காக குஜராத்திலுள்ள போர்பந்தருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த போதைப்பொருளானது இந்தியாவிற்கு கடத்த முயற்சித்ததாக ஆரம்பத்தில் சந்தேகித்த போதிலும், பின்னர் அவை இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அஹமதாபாத் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.