படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், அருட்தந்தை ஜெகதாஸ், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
நினைவேந்தலை தொடர்ந்து நினைவுத் தூபிக்கு முன்பாக நாட்டில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

















