காசாவின் தெற்கு பகுதியான ரஃபா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழி தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் தாக்குதலில் ஆறு பெண்கள், ஐந்து குழந்தைகள் அடங்குவதுடன், ஒரு குழந்தை பிறந்து ஐந்தே நாட்களான நிலையில் உயிரிழந்துள்ளது.
எகிப்து நாட்டின் எல்லையோரம் உள்ள ரஃபா பகுதி ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாக இருப்பதாக கூறும் இஸ்ரேல், ரஃபா மீது தரை வழி தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் கூறப்படுகின்றது.
ரஃபா நகரில் சுமார் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் வசித்து வருகின்றனர்.
காசா முனையில் உள்ள பெரும்பாலான மக்கள் ரஃபா நகருக்கு குடிபெயர்ந்து முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மனிதாபிமான பேரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், ரஃபா மீது தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, சவுதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்,
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக இஸ்ரேல் முன்வைத்துள்ள செயற்றிட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.