இரண்டு வருடங்களுக்குள் இந்த நாட்டை ஸ்திரப்படுத்தியது போன்று பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கான நடைமுறைத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
கொட்டகலை பொது மைதானத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இன்றைய மேதின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த சம்பளத்தை உயர்த்த ஒரு வருடம் கடுமையாக முயற்சி எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது. மே முதலாம் திகதிக்கு முன்னர் இந்த சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.
பல மாதங்களுக்கு முன்னரே பெருந்தோட்டக் கம்பனிகளை வரவழைத்து இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது. பெருந்தோட்டங்கள் அரசாங்கத்துக்கு சொந்தமானவை. உங்களுக்கு தேவையான வசதிகளை அவர்களால் வழங்க முடியாவிட்டால், அரசாங்கம் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டி வரும். அதற்கமையவே சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.
அதோடு நிற்காமல், மேலதிகமான ஒவ்வொரு கிலோ தேயிலைக் கொழுந்துக்காகவும் 80 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இன்று வெளியிட்டு அதனை உங்கள் முன்னிலையில் அறிவித்துள்ளார்.
ஒரே இலங்கை தேசமாக உங்களுக்காக காணி உரிமை உட்பட சகல உரிமைகளையும் வழங்குவதே தற்போதைய ஜனாதிபதியின் தொலைநோக்குத் திட்டமாகும். இரண்டு வருடங்களுக்குள் இந்த நாட்டை ஸ்திரப்படுத்தியது போன்று உங்கள் அனைவரின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கான நடைமுறைத் திட்டம் அவர் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை உங்களுக்கு அறிவிக்க விரும்புகின்றேன்” இவ்வாறு மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.