தமிழகத்துக்கு கர்நாடக மாநிலம் காவிரியில் இருந்து தண்ணீர் தராதது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்பதைக் காரணமாகத் தெரிவித்து கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்து வருகிறது.
காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழத்துக்கு தரவேண்டிய தண்ணீரை தராமல் தொடர்ந்தும் கர்நாடக அரசு செயற்பட்டு வருகின்றது.
அத்துடன், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 95-வது கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில்கூட கடந்த மே மாதத்தில் தமிழகத்துக்கு தரவேண்டிய 25 டிஎம்சி நீரை வழங்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியது.
ஆனால், கர்நாடகாவில் வறட்சி நிலவுவதாகத் தெரிவித்து தண்ணீரை தர கர்நாடக அரசு மறுத்துவிட்டது.
எனினும் ஒழுங்காற்றுக் குழுவும், மே 16-ம் தேதி அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும், அதில் தண்ணீர் வழங்குவது குறித்து ஆய்வு செய்யலாம் என தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் காவிரி நீரை நம்பிய பகுதிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விடயத்தில் மத்திய அரசை கர்நாடக அரசு மதிக்காமல் செயற்பட்டு வருகின்றது.
எனவே இதனைக் கேள்வி கேட்க வேண்டியது உச்ச நீதிமன்றம் என்பதால் நாம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்” என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேலும் தெரிவித்துள்ளார்.