தங்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்று முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக 72 சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தங்களுக்கான 35,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தி 4 மாதங்களுக்கு முன்னர் 72 சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.
இருப்பினும், சுகாதார அமைச்சினால் எழுத்துமூலம் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் குறித்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஏப்ரல் மாதம் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
ஆனால், இதுவரையில் அந்த வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாதமையால் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நோயாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்திற்கொண்டு, நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்காது, மாகாண ரீதியாக அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் இன்று முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று மத்திய மகாணத்திலும், நாளை சப்ரகமுவ மாகாணத்திலும், எதிர்வரும் 15ஆம் திகதி வடமேல் மகாணத்திலும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 16ஆம் திகதி தென் மகாணத்திலும், 20ஆம் திகதி ஊவா மகாணத்திலும், 21ஆம் திகதி நாடளாவிய ரீதியிலும் பணிப்புறக்கப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 2 ஆம் திகதி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரம், பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.