உலக நாடுகள் நிலவில் தரையிறங்கி வருகின்ற நிலையில், பாகிஸ்தானில் கராச்சியில் உள்ள குழந்தைகள் உயிரிழந்து வருவதாக அந் நாட்டு அமைச்சர் சையத் முஸ்தபா கமல் தெரிவித்துள்ளார்.
நேற்று (15) நடைபெற்ற நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் இதனை தெரிவித்த அவர்,
கராச்சி பாகிஸ்தானுக்கு சுமார் 68 சதவீத வருவாயை நாட்டுக்காக ஈட்டித் தரும் நகரமாக விளங்குவதாக தெரிவித்தார்.
மேலும், இரண்டு துறைமுகங்களை கொண்ட இந்த நகரம், மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் நுழைவு வாயிலாகவும் உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் கராச்சிக்கு தேவையான தண்ணீர் கூட கிடைப்பதில்லை.
அவ்வாறு தண்ணீர் வந்தாலும் நீரை விற்பனை செய்து வரும் மாஃபியாக்கள், அதனை பதுக்கி மக்களுக்கு காசுக்காக விற்பனை செய்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், நாட்டில் 2 கோடியே 62 இலட்சத்து குழந்தைகள் பாடசாலைகளுக்கு செல்வதில்லை எனவும், இது 70 உலக நாடுகளின் மக்கள் தொகையை காட்டிலும் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு பாக்கிஸ்தானில் பல பாடசாலைகள் நரகமாக உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஒரு பக்கம் இந்தியா நிலவில் தரையிறங்கும் செய்தி வெளிவரும் நிலையில், அடுத்த சில நொடிகளில் கராச்சி குறித்த செய்தி வெளியாகுவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்தியா இன்று வளர்ச்சி காண அந்த நாட்டிலுள்ள கல்வி முறையே காரணம் என தெரிவித்தார்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் உலகுக்கு தேவையான விஷயங்களை தனது மக்களுக்கு போதித்ததாலேயே, இன்று பல முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியர்கள் உள்ளதாக அமைச்சர் சையத் முஸ்தபா கமல் தெரிவித்துள்ளார்.
எனினும், நமது பல்கலைக்கழகத்தில் உலகுக்கு தேவையானதை கற்றுக்கொடுக்காததன் விளைவே, இன்று வேலைவாய்ப்பு இன்றி தம் நாட்டு இளைஞர்கள் இருப்பதாக தனது உரையில் அவர் தெரிவித்தார்.