நுவரெலியா மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா எலிய ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்திலிருந்து இன்று காலை கலசங்கள் கொண்டு செல்லும் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்று காலை மயூரபதி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜை வழிபாடுகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட அரசியல்வாதிகள் கலந்து கொண்டிருந்ததுடன் பௌத்த மதத் தலைவர்கள் மற்றும் பக்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கொழும்பு, வெள்ளவத்தை, மயூரபதி ஆலயத்தில் இன்று காலை 7 மணிக்கு நடைபெற்ற பூஜைகளைத் தொடர்ந்து முதலாவது நாள் தீர்த்த ஊர்வலம் ஆரம்பமாகியுள்ளன.
குறித்த ஊர்வலமானது கொள்ளுப்பிட்டி இந்திய தூதரகம், காலி முகத்திடல் ஊடாக பிரதான வீதி, செட்டியார் தெரு, ஆமர் வீதி, அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கடுவல, அவிசாவளை, யட்டியாந்தோட்டை, கினிகத்தேனை, ஹட்டன், கொட்டக்கலை, தலவாக்கலை, பூண்டுலோயா, தவலந்தனை சந்தி ஊடாக இறம்பொடை ஸ்ரீ ஹனுமான் ஆலயத்தை சென்றடையும் என சீதா எலிய சீதையம்மன் ஆலய நிர்வாக சபைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாளையதினம் காலை 7 மணிக்கு ஸ்ரீ ஹனுமான் ஆலயத்தில் நடைபெறவுள்ள பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, இரண்டாவது நாள் தீர்த்த ஊர்வலம் ஆரம்பமாகி, லபுக்கலை, நுவரெலியா ஊடாக, நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தை சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இந்தியாவின் திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர் 5 ஆயிரம் லட்டுக்களை வழங்குவதோடு, இந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 19ஆம் திகதி குப்பாபிசேகம் நடைபெறவுள்ளதுடன் நாளையதினம் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.