இந்த காலகட்டத்தில் இளைஞர்கள் அதிகமாக முகங்கொடுக்கும் பிரச்சினை என்றால் அது சொட்டை விழுதல் அல்லது முடி கொட்டுதல் எனலாம். இதற்கு மிக முக்கிய காரணம் ஒன்று சரியான பராமரிப்பு இல்லாமை மற்றொன்று அதிக மன அழுத்தம் ஆகும்.
மேலும், முடி உதிர்தல் என்பது ஹைப்பர் தைராய்டிசம் அல்லது ஹைபோ தைராய்டிசம் ஆகிய இரண்டின் காரணமாக ஏற்படலாம். இவை இரண்டுமே கெமிக்கல் சமநிலையின்மையால் உருவாகிறது.
தைராய்டு ஹார்மோன்கள் என்பது முடி வளர்ச்சி உட்பட பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தைராய்டு கோளாறுகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளித்து விட்டால் ஹார்மோன்கள் சமநிலை அடைந்து முடி உதிர்தல் குறைந்து மீண்டும் புது முடி வளர ஆரம்பித்து விடும்.
ஒரு சில தீவிரமான உடல் சார்ந்த மன அழுத்தம் காரணமாக முடி வளர்ச்சியின் இயற்கை சுழற்சி பாதிக்கப்படலாம். இது தலை முடி இழப்பு அல்லது முடி மெலிதல் உருவாக வாய்ப்புள்ளது. விபத்துக்கள், அறுவை சிகிச்சைகள் மற்றும் தீவிரமான உடல்நல கோளாறுகள் காரணமாக மயிர் கால்கள் பாதிக்கப்பட்டு அதனால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
முடி உதிர்தல் ஏற்படுவதற்கான பொதுவான காரணத்தில் ஒன்று வயது சார்ந்த மரபணு கோளாறு. பெரும்பாலான ஆண்களில் வயதாகும் பொழுது தலைமுடி உதிர்ந்து சொட்டை விழுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது படிப்படியாக நிகழக்கூடிய ஒன்று. இது மரபணு ரீதியாக கடத்தப்படும் ஒன்றாக காணப்படுகின்றது.
தலைமுடியின் வளர்ச்சி மற்றும் அதன் வலிமைக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம். குறிப்பிட்ட சில வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் குறைபாடு முடி உதிர்தல் பிரச்சனையை ஏற்படுத்தி தலைமுடி வளர்ச்சியை குறைக்கலாம்.
இரும்புச்சத்து, சிங்க், பயோடின் மற்றும் புரோட்டின் போன்றவை போதுமான அளவு கிடைக்காத போது முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்த ஊட்டச்சத்து குறைபாடுகளை நீங்கள் ஈடுகட்டிவிட்டால் உங்களுடைய முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்.
புற்றுநோய், ஆர்த்ரைட்டஸ், மனசோர்வு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், அதிக ரத்த அழுத்தம் போன்ற ஒரு சில மருத்துவ நிலைகளுக்கு நீங்கள் மருந்து சாப்பிடும் பொழுது அதன் பக்க விளைவின் காரணமாக முடி உதிர்வு ஏற்படலாம்.
தலையில் ரேடியேஷன் சிகிச்சை செய்தாலும் அதிகப்படியான முடி உதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இதுபோன்ற சூழ்நிலையில் வழக்கமான முறையில் மீண்டும் முடி வளர்வதற்கு வாய்ப்பில்லை.