தென் கொரிய ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர்.
தென் கொரியாவின் ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உபதலைவரும் செயலாளர் நாயகமுமான சுங் சியுங்-யுன் (Chung Seung-yun) தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
கடந்த வருடம் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டம் மிகவும் பலம் வாய்ந்த ஒரு சட்டமாகும் என தென் கொரியாவின் ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உபதலைவர் சுங் சியுங்-யுன் தெரிவித்தார்.
அத்துடன், இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு தென் கொரியாவில் நடைமுறைப்படுத்தப்படும் பொது நிறுவங்களுக்கான ஒருமைப்பாடு மதிப்பீட்டு முறைமையை (Integrity Assessment System) இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.