வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகி உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளன.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் நேற்றிரவு தாழமுக்க நிலையொன்று உருவாகியுள்ளது. இது எதிர்வரும் நாட்களில் வடகிழக்குக் திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடைந்து நாளையதினம் தாழமுக்கமாக மாறும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தாழமுக்கம் காரணமாக அது சூறாவளியாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சூறாவளிக்கு Oman நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Remal (Pronounce as Re-Mal) எனும் பெயர் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இது எதிர்வரும் 25ஆம் திகதியளவில் வடக்கு ஒரிசா அல்லது மேற்கு வங்கம் பகுதியினூடாக ஊடறுத்துச் செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் தென்மேற்கு கடல் பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு அரேபிய கடற் பிராந்தியத்தில் காற்றானது 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன், பலத்த மழையும் கடற் கொந்தளிப்பும் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீனவர் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் சிவப்பு நிறம் தீட்டப்பட்ட பிராந்தயங்களில் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் எனவும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்பை அவதானமாக செவிமடுத்து செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.