பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த பட்ச சம்பளத்தை 1,700 ரூபாயாக அதிகரிப்பதற்கான தீர்மானத்தை அனைத்து தோட்ட முதலாளிமார்களும் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, உரிய சம்பளத்தை வழங்காத தோட்டங்கள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு முறையானவர்களிடம் கையளிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் ஏற்கனவே குறைந்தபட்ச சம்பளத்தை விட அதிகமாக சம்பளத்தை செலுத்தி வருவதாகவும், அரசாங்கத்திடம் இருந்து தனியாருக்கு மாற்றப்பட்ட உள்ளூர் தோட்ட நிறுவனங்களில் இந்த சம்பளத்தை அதிகரிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறைந்தபட்ச சம்பளத்தை அமுல்படுத்தாத தோட்ட நிறுவனங்களை கையகப்படுத்தி அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்தக் கூடியவர்களுக்கு வழங்குவதற்கான அடிப்படை சட்டத்தை தயார் செய்ய ஜனாதிபதி அமைச்சரவையில் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அடுத்த மாதம் முதல் உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் இல்லையெனில், சட்டத்தை அமல்படுத்த தொழில் திணைக்களத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.