நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் கடந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரியின் கரகல பிரதேசத்தில் 143.3 மில்லி மீற்றர் வரையான அதிகளவான மழை பதிவாகியுள்ளது.
இதேவேளை, களு கங்கையின் கிளை நதியான குடா கங்கை மில்லகந்த பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கு நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை வரை குடா கங்கையின் நீர்மட்டம் 6.53 மீற்றராக உயர்ந்துள்ளதாகவும் இது 8 மீற்றர் மட்டத்தை தாண்டினால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தற்போது பெய்து வரும் மழையுடன் மகுரு ஆற்றின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, கிங் மற்றும் நில்வலா ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது
இந்த நிலையில், இன்றும் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை காரணமாக மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் மீறி குறித்த மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அதிக காற்று வீசி வருவதைக் கருத்தில் கொண்டு மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.