தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பை அரசாங்கம் பரிந்துரைத்தவாறு வழங்க முடியாது என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
புதிய சம்பள உயர்வால் பெருந்தோட்டத் துறையில் ஏற்பட்டுள்ள பாதகமான விளைவுகளுக்கு எதிராக அனைத்து பங்குதாரர்களாலும் வெளியிடப்பட்டுள்ள கூட்ட அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தேயிலை மற்றும் இறப்பர் துறையில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70 வீதமாக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துக்கும் கடும் எதிர்ப்பினை முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிக்கும் இந்தத் தீர்மானமானது பெருந்தோட்டத் துறையை நலிவடையச் செய்து இறுதியில் நாட்டில் கடுமையான பொருளாதார ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், தொழில்துறையிலுள்ள அனைத்து பங்குதாரர்களின் நலன்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் எந்த நன்மையையும் தராத இந்தத் தீர்மானம் நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழிலின் ஒவ்வொரு துறையையும் மேலும் பலவீனப்படுத்தும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முழு பெருந்தோட்டத்தின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளதாகவும் மேலும், நாடு முழுவதும் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூகங்களின் வாழ்வாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் முதலாளிமார் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவால் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்திச் செலவு மிக அதிகமாக இருப்பதுடன் தற்போது மதிப்பிடப்பட்டுள்ள ஒரு கிலோ தேயிலைக்கான செலவு சுமார் 45 வீதத்தால் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழில் உலக சந்தையில் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படுவதுடன் அத்துறைகளில் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வருடாந்த EPF, ETF மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் 35 பில்லியனாக உயரும் என்பதால், இந்த சம்பள உயர்வு கம்பனிகளுக்கு பெரும் சுமை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் அழுத்தத்தை தாங்க முடியாது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் முதலாளிமார் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.