மண்சரிவு அதிகம் உள்ள அபாயப் பகுதிகளில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த பாடசாலைகள் அமைந்துள்ள பகுதியில் அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், மண்சரிவு அபாயப் பகுதிகளில் பல்வேறு அரச நிறுவனங்களும் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் சுமார் 14,000 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் அதில் 2600 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 2500 இக்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான பிரதேசங்கள் மண்சரிவு அதிகம் உள்ள அபாய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காலநிலை தொடர்பான அவசரகால சூழ்நிலைகளின் போது பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்தவதே அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தின் முதன்மையான விடயம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.