”நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (Manmohan Singh) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” காங்கிரஸ் கட்சியால் மட்டுமே வளர்ச்சி அடிப்படையிலான, எதிர்காலத்தை உருவாக்கி அதில், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாக்க முடியும்.
கடந்த காலத்தில் எந்தவொரு பிரதமரும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைக்கும் வகையில் வெறுக்கத்தக்க, நாடாளுமன்ற மரபுகளை மீறும் விதமான சொற்களை உச்சரித்தது இல்லை.
தேர்தல் பிரசாரத்தின் போது, மோடி மிகவும் மோசமான வெறுப்பு பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார். அவை முற்றிலும் பிரிவினையை ஏற்படுத்தும். தரம் தாழ்ந்த, கண்ணியம் குறைந்த பேச்சால் பிரதமர் பதவியின் மாண்பை குறைத்த முதல் பிரதமர், மோடி ஆவார்.
மோடியின் வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு. என்னை பற்றியும் பொய்யான தகவல்களை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்திலிருந்து ஏனைய சமூகத்தை தனித்து பார்த்ததில்லை.
அப்படி ஒரு சமூகத்தை பிரித்து பார்ப்பதற்கு காப்புரிமை வாங்கி வைத்துள்ள ஒரே கட்சி பாஜக. அவர்களது ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சீரழிந்து உள்ளது” இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.