இந்தியா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடிவருடியாகவே சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தியாவினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன் என்பதுடன், ஜனாதிபதித் தேர்தலில் விரக்தியடைந்துள்ள தமிழ் மக்களை வாக்குச் சாவடிக்கு இழுத்துச் செல்லவே பொது வேட்பாளர் நாடகம் நிகழ்த்தப்படுகின்றது.
இவ்வாறாக விக்னேஸ்வரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்க்கும் இடையில் எந்தவித இடைவெளியும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. இந்தியாவின் முகவராக இருக்கக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துகின்ற செயற்பாட்டிலேயே விக்னேஸ்வரன் தொடர்ந்து செயற்படுகின்றார்.
இன்று இந்திய மேற்குலக நாடுகளுக்கு ரணில் விக்கிரமசிங்வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற சூழல் இருக்கின்றது. தமிழ் இனம் சார்ந்த கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு வருகை தருகின்ற பொழுது அவருக்கு செங்கம்பளம் விரித்து இவர்கள் வரவேற்பது கண்டிக்கத்தக்கது.
விக்னேஸ்வரன் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதை பிற்போடுவதை வரவேற்றிருக்கின்றார். ஆனால் குறித்த தேர்தல்கள் உரிய காலத்தில் நடாத்தப்பட வேண்டும் என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய நிலைப்பாடாகக் காணப்படுகிறது.
தேர்தல் பிற்போடப்படுவது ஜனநாயகப் படுகொலையையே நிகழ்த்தும்.
இன்று கூட்டமைப்பினர் சொல்லும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை.
இவ்வாறு மக்கள் வெறுப்படைந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக கூறியே விக்னேஸ்வரன் போன்றோர் செயற்படுகின்றனர்” என செல்வராசா கஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.