அரசியலமைப்புக்கு அமைவாக, ஆட்சி அமைக்கின்ற எந்த அரசாங்கமாக இருந்தாலும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகம, கிரிவத்துடுவவில் நிர்மாணிக்கப்பட்ட குருதேவ சுவ அரண என்ற பிக்குகளுக்கான வைத்திய நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் பிக்குகளுக்காகக் கட்டப்பட்ட முதலாவது வைத்தியசாலை இதுவாகும். நம் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பிக்குகளுக்கான விடுதிகள் மட்டுமே இருந்தன.
இந்த மருத்துவமனையானது நோய்வாய்ப்பட்ட பிக்குகளுக்காகக் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி.
அரசாங்கத்தையும் பௌத்தத்தையும் பிரிக்க வேண்டியது அவசியம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன் சட்டத் தன்மை பற்றி சிந்திக்கும்போது, நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் அவரவர் விருப்பப்படி ஒரு மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு.
மேலும் எந்த மதத்திலும் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கான உரிமையும் உள்ளது.
எந்தவொரு அரசாங்கமும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.
அந்தப் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கும் உள்ளது.
இதற்கு ஆதரவளிக்கத் தவறுவது அரசியலமைப்புக்கு எதிரானதாகும். சட்ட ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கலாம். ஆனால், கோட்பாடுகள் தொடர்பில் விவாதிக்க முடியாது.
அரசாங்கம் என்ற வகையில் அதனைப் பின்பற்ற வேண்டும். இதை மாற்ற விரும்புவோர் அரசியலமைப்பையே மாற்ற வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.