அண்மையில் ஏற்பட்ட ரிமெல் புயல் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாநிலங்களில் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்குப் பின்னர் தற்போது அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த மாதம் 25 ஆம் திகதி புயலாக உருமாறியது.
‘ரிமெல்’ எனப் பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசம் இடையே 26 ஆம் திகதி இரவு கரையை கடந்தது.
புயலைத் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மேற்குவங்காளத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மேலும் மிசோரம், மணிப்பூர், அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடும் மழை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.