சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில், தமிழ் கல்வி பணிப்பாளர் ஒருவர் இல்லையெனவும், குறிப்பாக மத்திய மாகாணத்தில் தமிழ் கல்வி திணைக்களத்தை இல்லாமல் செய்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது எதிர்பாராத கொரோனா தாக்கத்தினாலும், பொருளாதார நெருக்கடியினாலும் மாணவர்களின் கல்வியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தற்போது பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு சற்று நாட்டில் சில மாற்றங்கள் நிகழ்வதையும் அவதானிக்க முடிவதாக குறிப்பிட்டார்.
அத்துடன், தற்போதைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பல மாற்றங்களை மேற்கொண்டு, கல்வி முறைமையை ஒரு முறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையை தாம் சந்தோசமாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை மலையக பாடசாலைகளிலுள்ள பிரச்சினைகளையும் குறிப்பிட்டு கூற வேண்டும் என தெரிவித்த இராதாகிருஷ்ணன்,
பெருந்தோட்ட பாடசாலைகள் 844 பாடசாலைகள் இருப்பதாகவும், அந்த பாடசாலைகள் தற்போது வளர்ச்சி கண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இது இம்முறை வெளியான காபொத சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளதாகவும், இதற்காக அந்தந்த பாடசாலை அதிபர், ஆசிரியர்களை பாராட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதேநேரம் ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில், தமிழ் கல்வி பணிப்பாளர் ஒருவர் இல்லையெனவும், குறிப்பாக மத்திய மாகாணத்தில் தமிழ் கல்வி திணைக்களத்தை இல்லாமல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் கல்வி பணிப்பாளர் ஒருவர் மீண்டும் நியமிக்கப்பட மாட்டார் என தெரியவருவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் மாகாணசபை தேர்தல் ஒன்ற இடம்பெறும் பட்சத்தில் இது குறித்து கதைக்க முடியும் என வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தமிழ்மொழி பேசக்கூடிய அதிகாரிகள் இல்லை எனவும், தமிழ்மொழி மூலமான சுற்றிரிக்கை இல்லை எனவும், தமிழ்மொழி கருத்தரங்குகள் இல்லை என குறிப்பிட்ட அவர், இவ்வாறான சமயத்தில் தமிழ் அதிபர் ஆசிரியர்கள் தமது காரியங்களை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகவே இது குறித்து கல்வி அமைச்சர் கவனத்திற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் சபையில் வலியுறுத்தினார்.