குடும்பநல சுகாதாரசேவைக்கான புதிய ஆட்சேர்ப்பு தொடர்பாக நிதியமைச்சின் முகாமைத்து பிரிவில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
குடும்பநல சுகாதாரசேவைக்கான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வில் சித்தியடைந்து இதுவரை பணியமர்த்தப்படாத விண்ணப்பதாரர்கள் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
குடும்பநல சுகாதாரசேவை உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து இந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான சுமார் அறுநூறு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வில் சித்தியடைந்த இரண்டாயிரத்து எண்ணூற்று முப்பத்தாறு பேரில் 2,500 பேர் இணைத்துக் கொள்ளப்பட்ட போதிலும், தகுதியானவர்களில் 317 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.