தமிழர் தரப்பில் பேரம் பேசும் சக்தி அதிகமாக இருக்கும் இச் சந்தர்ப்பத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்ற எமது வாக்குகளே முடிவைத் தீர்மானிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் M.Aசுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற ‘மக்கள் கருத்துக் களம்‘ என்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ புத்திசாலித்தனமாகச் சிந்தித்து பிரதான மூன்று வேட்பாளர்களையும் குறைந்தபட்சம் ஒரு தீர்வுக்காவது இணங்கச் செய்ய வேண்டும்.
ஆயுதப் போராட்ட காலத்தில் இருந்த சூழல் தற்போது இல்லை என்பதால் தற்போதைய நிலைமைகளுக்கேற்ப அதனை ஜனநாயக சூழலாக மாற்றியமைத்துப் பயணிக்க வேண்டுமெனவும்.
மேலும் ”மூலோபாயத் திட்டங்களுடன், மிகக் கடினமான முறையில் தென்னிலங்கைத் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், எமது வாக்குப்பலத்தினைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றி இந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.
வாக்குகளைப் பிரயோசனமான முறையில், அதுவும் பெரும்பான்மையினர் மூன்றாகப் பிரிந்து இருக்கும் போது நாங்கள் தீர்மானிக்கிற சக்தியாக எங்களுடைய வாக்குகளைத் திரட்ட முடியும் என்றால் அது எங்களுக்கு மிகவும் பலமானதாக இருக்கும்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.