இந்தோனேஷியாவில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த பெண், மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இந்தோனேஷியாவின் தெற்கு சுலவேசி பகுதியின், கலேம்பங் கிராமத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கிராமத்தில் வசித்து வந்த 45 வயதான ஃபரிதா எனும் பெண் கடந்த வியாழக்கிழமை காணாமற் போயிருந்த நிலையில், அவரது கணவர் உள்ளிட்ட கிராமத்தவர்கள் அவரை தொடர்ச்சியாக தேடி வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த பெண்ணின் உடைமைகள் காட்டுப் பகுதியில் காணப்பட்ட நிலையில், கிராமத்தினர் தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதன்போது மலைப்பாம்பு ஒன்று பெரிய வயிற்றுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அந்த மலைப்பாம்பின் வயிற்றை கிழித்தபோது ஃபரிதாவின் தலை வெளிப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுமார் 16 அடி நீளம் கொண்ட குறித்த மலைப்பாம்மை கிராம மக்கள் முழுமையாகக் கிழித்து ஃபரிதாவின் சடலத்தை வெளியே எடுத்துள்ளனர். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவில் மலைப்பாம்புகளின் தாக்குதலுக்கு இலக்காகி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.