நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
இதன்படி மேல், சப்ரகமுவ வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் 40-முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பத்தில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 32 ஆயிரத்து 296 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்த 21 ஆயிரத்து 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
அத்துடன் அனர்த்தங்களினால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.