நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரில் இரண்டு வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில் நால்வரின் உடல்கள் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளத்தில் தப்லேஜங் மாவட்டம் பக்டாங்லங் ஊரக நகராட்சி பகுதியில் நேற்றிரவு இந்த அனர்ந்தம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலச்சரிவில் 2 வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில், ஒரு வீட்டிலுள்ள கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு மகள்களும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும், மற்றைய வீட்டில் இருந்தவர்களின் நிலை குறித்து, இதுவரை தெரியவராத நிலையில், அவர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த இரு குடும்பத்தினராலும் வளர்க்கப்பட்டு வந்த, சுமார் 50 ஆடுகள் மற்றும் ஏராளமான கோழிகளும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுனிறது.
நேபாளத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இடைவிடாது கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேபாளத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் பேரழிவுகள் ஏற்படுவது வழக்கம்.
அதன்படி, இவ்வாண்டு சுமார் 18 இ லட்சம் மக்கள் பாதிக்கப்படலாம் என அந்நாட்டு அதிகாரிகள் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.