இலங்கை இளைஞர் சமூகத்துக்காக பொதுக் கற்றலுக்கான கல்வித் தளமான http://www.publiclearn.lk/ என்ற இணையத்தளம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம, இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பெட்ரிக் (Andrew Patrick), கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
Public Learn என்பது உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இருந்து இலவச பாடநெறிகளை பயனர்களை வழிநடத்தும் ஒரு தளமாகும்.
இந்த தளமானது ரீஜண்ட் குளோபல் (Regent Global) என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகின்றது.
இதனை இலங்கையில் அறிமுகப்படுத்த பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, புதிய பொருளாதார மாற்றத்திற்காக நாடு டிஜிட்டல் மயமாக்கலுடன் வேகமாக முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளை சீர்செய்யும் பணிகள் இடம்பெறுவதாகவும் ஒரு புதிய பொருளாதார மாற்றத்திற்கான அணுகுமுறையில் மாற்றம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.