அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி-7 அமைப்பின் மாநாட்டுக்கு விஜயம் செய்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இன்று காலை நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
ஜி7 மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தார்.
மேலும் போப் ஆண்டவர் பிரான்சிசை பிரதமர் மோடி சந்தித்திருந்ததோடு, இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையே ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றும் போது, தொழில் நுட்பத்தில் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஒரு உள்ளடக்கிய சமுதாயத்தின் அடித்தளத்தை அமைப்பதற்கு அது ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவுக்கு குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து தொழில்நுட்பத்தில் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வருவதன் முக்கியத்துவத்தினை நாம் உணர வேண்டும். செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய மூலோபாயத்தை வகுத்த முதல் சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.