இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த சட்ட மூலத்தைத் தயாரித்து, ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
இலங்கை கிரிக்கெட் சபை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு கடந்த வருடம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் இறுதி அறிக்கையே இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சரவை உப குழுவில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் அங்கம் வகித்திருந்தனர்.
அந்த அறிக்கையில் இலங்கை கிரிக்கெட் கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த அமைச்சரவை உப குழு அறிக்கையை மையப்படுத்தி, அமைச்சரவையினால் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய யாப்புக்கான சட்டமூலத்தை தயாரிக்க நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறியின் தலைமையில், இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது