பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடவுள்ளார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றிபெற்றார்.
இதனைதொடர்ந்து இரண்டில் ஒரு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யவேண்டும் என்ற கட்டாயம் காணப்பட்டதால், இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவின் டெல்லி இல்லத்தில் காங்கிரஸ் உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி பதவியை ராகுல் காந்தி இராஜினாமா செய்யவுள்ளார் எனவும், அவருக்கு பதிலாக பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளார் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை வயநாடு மக்களுக்காக தானும், பிரியங்காவும் எப்போதும் குரல் கொடுப்போம் எனவும், வயநாட்டுக்கு அடிக்கடிச் செல்வேன் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன் முதல்முறையாக தேர்தல் களத்திற்கு பிரியங்கா காந்தி வந்திருக்கும் சூழலில், தேர்தலை கண்டு தமக்கு அச்சமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.