சா்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மீது, சீன கடலோரக் காவல் படைக் கப்பல் மோதியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் தோமஸ் மணல்திட்டுப் பகுதியை நோக்கி, கட்டுமானப் பொருட்களுடன் நேற்று (17) பயணித்த பிலிப்பைன்ஸ் கப்பலை, சீன கடலோரக் காவல் படைக் கப்பல் தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ள நிலையில், இரு கப்பல்களும் மோதிக்கொண்டதாக சீன கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் பாதிப்புக்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், கப்பல்கள் மோதிக் கொண்டதை உறுதிப்படுத்தியுள்ள பிலிப்பைன்ஸ், வழக்கம்போல் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டுதான் தங்களது கப்பல் சென்றதாக கூறியுள்ளது.
தென் சீன கடலின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளுக்கும் சீனா உரிமை கொண்டாடிவருகிறது.
இருந்தாலும், அந்தக் கடல் பகுதியில் தங்களுக்கும் உரிமையுள்ளதாக பிலிப்பின்ஸ், மலேசியா, மற்றும் தாய்வான் ஆகிய கூறிவருகின்றன.
இதன் காரணமாக அந்த நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
இதற்கு முன்னரும், குறித்த கடல் பகுதியில் சீன – பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மோதிக் கொண்ட சம்பவங்கள் பல முறை நடந்தேறியுள்ளதாகவும், இதில் கப்பல்கள் சேதமடைந்ததுடன் சிலா் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
குறிப்பாக, தென் சீன கடலில் அமைந்துள்ள இரண்டாம் தோமஸ் மணல்திட்டுப் பகுதிக்கு சீனா, பிலிப்பின்ஸ் ஆகிய இரு நாடுகளுமே உரிமை கொண்டாடி வருகின்றன.
அந்த மணல் திட்டுப் பகுதியில் பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே தனது கடற்படைக் கப்பலை கடந்த 1999 இல் மோதியதாகவும், இதில் சேதமடைந்த அந்தக் கப்பலை அங்கேயே நிரந்தரமாக வைத்து அதில் படைவீரா்களையும் பிலிப்பைன்ஸ் நிறுத்தியுள்ளதாகவும் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தச் சூழலில், தென் சீன கடல் பகுதிக்கு நுழையும் கப்பல்களை நோக்கி சுடவும் அந்தக் கப்பல்களில் இருப்பவா்களை கைது செய்து 60 நாட்கள் வரை காவலில் வைத்திருப்பதற்கும் வகை செய்யும் புதிய விதிமுறைகளை சீனா கடந்த சனிக்கிழமை(15) அறிவித்தது.
சீனாவின் இந்த விதிமுறைகளை புறக்கணிப்பதாக பிலிப்பைன்ஸும் தெரிவித்திருந்தநிலையில், தற்போது, இரு நாட்டுக் கப்பல்களும் மோதிக்கொண்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.