”புதிய அரசாங்கத்தில் நியாயமற்ற வரிகள் மாற்றப்படும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சாதாரண மக்களின் வீட்டிற்கு வாடகை வருமான வரி விதிக்கப்படாது என ஜனாதிபதி தெரிவித்துள்ள போதிலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய வரி அறவிடப்படும்.
எனவே நாட்டு மக்கள் தொடர்பில் சிந்தித்து குறித்த வரி அறவிடுவதனை ஜனாதிபதி மீளப்பெறுவாராயின் நாம் மகிழ்வடைவோம்.
ஆனால் சர்வதேச நாணய நிதியத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு நிபந்தனைகளிலும் மாற்றம் மேற்கொள்ள முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
எனினும் மாற்றம் மேற்கொள்வதாக ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறுகின்றார். அதாவது சர்வதேச நாணயநிதித்துடனான ஒப்பந்தத்தில் மாற்றம் மேற்கொள்ள முடியும் என்பதனையே ஜனாதிபதி இன்று கூறுகின்றார்.
எனவே மக்களுக்கு நாம் ஒரு விடயத்தை தெரிவித்து கொள்கின்றோம். எதிர்வரும் மாதங்களில் இந்த நாட்டில் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தில் நியாயமற்ற வரிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.