சுற்றுலாத்துறையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினா் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளாா்.
இவ்விடயம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் மேலும் கருத்துத் தொிவித்த சாணக்கியன்,
வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுற்றுலா அபிவிருத்திகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை வட கிழக்கில் குறைவாக காணப்படுகின்றது.
வடக்கு கிழக்கினை பொறுத்த வரையில் இன்று சுற்றுலாப்பயணிகளின் வருகை மிக குறைவாக உள்ளது. கிழக்கு மாகாணத்தின் அறுகம்பை பிரதேசத்தில் அரசாங்கத்தின் எந்த முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத போதும் சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தருகின்றனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் 20ம் திகதி வரவிருப்பதை செய்திகள் மூலம் அறிய முடிகின்றது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலத் தொடர்பினை ஏற்படுத்துவது, புகையிரத சேவையினை ஆரம்பிப்பது மிக முக்கிய விடயமாக உள்ளது.
ஏனெனில் தென்னிந்தியாவில் உள்ள எங்களது தமிழ் சகோதர மக்களில் குறிப்பிட்ட தொகையினர் இலங்கைக்கு வந்தால் வடக்கு, கிழக்கினை எம்மால் கட்டியெழுப்ப முடியும்.
ஆகவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகள் மூலமாக வருமானமீட்டுவதற்கான வழியினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென தொடர்ச்சியாக கூறக் காரணம் நாங்களே எங்களது பிரதேசங்களை கட்டியெழுப்ப முடியும் என்பதால் ஆகும்.
ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டுமாயின் அவர் தமிழ் மக்களுக்கு கூறும் சில விடயங்களையாவது செய்ய வேண்டும்.
இவற்றினை மேற்கொள்ளாது செயற்படுவதனால் தமிழ் மக்களை ஏமாற்றுவதனையே தனது நோக்கமாக கொண்டுள்ளார் என்பதனையே நாங்கள் எண்ண முடியும் என நாடாளுமன்ற உறுப்பினா் இராசமாணிக்கம் சாணக்கியன் மேலும் தொிவித்துள்ளாா்.