ஜப்பானில் வேகமாக பரவிவரும், தசையுண்ணி பக்டீரியாக்கள் இலங்கையில் பரவும் ஆபத்து இப்போதைக்கு இல்லை என சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உலக நாடுகள் மிகுந்த அவதானத்துடன் இருக்கின்றன. இது உலக அளவில் ஆபத்தை விளைவிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனத்தினாலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஜப்பானில் பரவி வரும் இந்த பக்டீரியாவை வைரஸை விட வேமாக கட்டுப்படுத்திவிட முடியும். உரிய சிகிச்சை முறைமைகள் ஊடாக இதனைக் கட்டுப்படுத்தலாம்.
இதற்கான நடவடிக்கைகளையும் அந்நாட்டு அதிகாரிகள் எடுத்துள்ளார்கள்.
எனினும், இலங்கைக்கு இந்த பக்டீரியாவினால் இப்போதைக்கு ஆபத்து இல்லை.
எவ்வாறாயினும், சுகாதார அமைச்சு விமான நிலையத்திற்கு இதுதொடர்பான அவதானத்துடன் இருக்குமாறு அறிவித்தல் விடுத்துள்ளது.
கொரோனா போன்ற ஆபத்தான வைரஸாக இது இருக்காது. முடிந்தளவு இது அந்நாட்டுக்குள்ளேயே கட்டுப்படுத்தப்படும் என்றே நாம் நம்புகிறோம்.
நாம் இதுதொடர்பாக சுகாதார அமைச்சு என்ற வகையில், உரிய நடவடிக்கைகளை எடுப்போம்” இவ்வாறு சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.