உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்த முயற்சியின் ஒரு பகுதியாக வடகொரியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது வியட்நாமிற்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
வியாட்நாமில் அந்த நாட்டு ஜனாதிபதி TO LAM பேச்சுவார்த்தை நடத்திய புட்டின், ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்காக நம்பகத்தன்மை வாய்ந்த பாதுகாப்புக் கட்டமைப்பு உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவருடன் பகிர்ந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணும் வகையில் அந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று இருதரப்பும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னா் இரு தரப்பு உறவை பலப்படுத்துவதற்கான பல்வேறு ஒப்பந்தங்களில் விளாடிமிர் புட்டின் கையொப்பமிட்டுள்ளார்.
முன்னதாக , வடகொரிய ஜனாதிபதி கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்திய புட்டின் உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்து, பன்முகத் தன்மை நிலவச் செய்ய தங்களது கூட்டணி உதவும் என்று தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், வியட்நாமுடனான உறவை பலப்படுத்துவதற்கான ஒப்பந்தத்திலும் புட்டின் தற்போது கையொப்பமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது