கட்சித் தலைமையை விமர்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேக்காவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி, கட்சிக்குள் இருந்து கொண்டு தலைமையை விமர்சிப்பது ஏற்புடையது அல்ல எனவும் சரத் பொன்சேகா ஜனாதிபதியுடன் இணைவதற்கு தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கடந்த வார நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருந்தார்.
தன்னை நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கவிடாது எதிர்க்கட்சிகள் தடுப்பதற்கு முயற்சிப்பதாக பொன்சேகா குற்றம் சுமத்தியிருந்தார்.
தனக்கு நாடாளுமன்றில் பேசுவதற்கு நேரம் வழங்க வேண்டாம் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொன்சேகா தெரிவித்திருந்தார்.
இவ் விடயம் தற்போது பேசுபொருளாக மாறியதையடுத்து, எதிர்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல இது குறித்து பதிலளித்திருந்தார்.
அதன்படி, கட்சி மீது வழக்கு தொடுத்து தலைமையை விமர்சிக்கும் ஒருவருக்கு எவ்வாறு நாடாளுமன்றத்தில் கால அவகாசம் வழங்க முடியும் என எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.