இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி காலத்தில் கல்வி அமைப்பு முழுமையாக சீரழிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
நரேந்திர மோடியின் தகுதியற்ற ஆட்சி மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், இந்த நாட்டின் எதிர்காலத்தை கட்டாயம் காப்பாற்றியே ஆகவேண்டும் எனவும் வலியுத்தியுள்ளார்.
மேலும், பா.ஜ.க. ஆட்சி காலத்தில் மாணவர்கள் படிக்க கட்டாயப்படுத்தப்படவில்லை. மாறாக தங்களின் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள மாணவர்கள் அரசுடன் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் மருத்துவ கல்வியில் இணைவதற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற நிலையில் அதன் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது.
இதனை தொடர்ந்து, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், நடத்தப்பட்ட தேர்வை இரத்து செய்து மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.