உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள துயரச் சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை வீதி உலப்பனையைச் சேர்ந்த கே.எம்.பி.ஆர்.ஜி. குலசேகர என்ற 18 வயது மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இவர் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணிதப்பிரிவில் பயின்று வந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரது தாய் ஆசிரியை எனவும், தந்தை வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார் என்றும் குறிப்பிடப்படுகிறது. தந்தை மறைத்து வைத்திந்த அவரது துப்பாக்கியை கண்டு பிடித்த மாணவன், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேலைக்குச் செல்லும் தனது தாயாரை வணங்கி, பின்னர் அறைக்குச் சென்ற குறித்த மாணவன், அறையின் கதவைப் பூட்டிவிட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என்று கம்பளை, உலப்பன பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை சர்வதேச பாடசாலையில் கல்வி பயின்ற இந்த மாணவன், க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 08 ஏ சித்தி மற்றும் டீ சித்தியுடன் சித்தியடைந்து உயர்தரத்தில் கல்வி கற்பதற்காக கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இணைந்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னதாக உயர்தரத்துக்குத் தயாராகிய இவர், பரீட்சை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் தொடர்ச்சியாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. உயிரிழந்த குறித்த மாணவன் பெரும்பாலும் இணையவழியில் பாடங்களைச் கற்றுள்ளதோடு, கணினி மற்றும் கைத்தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.