இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில் ”மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக முதல்வர் எழுதிய கடிதம் தனக்கு கிடைத்துள்ளதாகவும் 34 இந்திய மீனவர்கள் இலங்கையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆறு பேர் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொழும்புவிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் யாழ்பாணத்தில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அதனை தொடர்ந்து செய்வோம் என உறுதியாக நம்பலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.