வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பினை வெளியிடவுள்ளார்.
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானம் நாளையும் நாளை மறுதினமும் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வேண்டுகோளுக்கிணங்க நாளைய தினம் நாடாளுமன்றத்தில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்பிரகாரம் நாடாளுமன்றம் நாளை காலை 9.30 க்குக் கூடவுள்ளதுடன் மாலை 5.00 மணி வரை விவாதம் நடைபெறும் எனவும், இத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 3 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர் குழுவுடனும் சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கியுடனும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனுமதியை, நிதி அமைச்சருக்கு வழங்குவதற்காக இந்தத் தீர்மானம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனிடையே கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மீதான விவாதம் நாளையம் நாளை மறுதினமும் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.