யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராணுவத்தின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகச் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிஹால்தல்துவ தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் மோசடியை கட்டுப்படுத்துதற்காக கடந்த காலங்களில் நாடாளாவிய ரீதியில் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் சுற்றிவளைப்புக்களின் போது பெருமளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் சட்டவிரோதமாக கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களும் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டன.
மேலும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று முதல் மீளவும் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக கொழும்பு நகரை உள்ளடக்கிய வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நாடாளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகச் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிஹால்தல்துவ தெரிவித்துள்ளார்.