அட்லாண்டிக் சமுத்திரத்தில் 170 குடியேற்றவாசிகளுடன் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 89 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக மொரெட்டேனியாவின் கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும் மொரெட்டேனியாவின் கரையோர காவல்படை தெரிவித்துள்ளது.
செனெகல் கம்பியா எல்லையிலிருந்து 170 பேருடன் பயணித்த படகொன்றே இவ்வாறு, மொரெட்டேனியாவின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பா செல்ல முயலும் குடியேற்றவாசிகளிற்கான பிரதான இடைத்தங்கல் நாடாக மொரெட்டேனியா காணப்படுகின்றது.
குடியேற்றவாசிகளுடன் ஆயிரக்கணக்கான படகுகள் குறித்த பகுதியிலிருந்து பயணிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆபத்தான இந்த பாதையில் பயணிக்கும் படகுகள் ஸ்பெயினின் கனரி தீவுகளை நோக்கி செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, கடந்த வருடம் குறித்த தீவிற்கு 40,000க்கும் அதிகமானவர்கள் வருகைத்தந்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டை விட அதிகம் எனவும் ஸ்பெயின் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பாவிற்கு செல்ல முயலும் குடியேற்றவாசிகள், ஒரு படகில் அதிகளவானவர்கள் பயணிப்பதன் மூலம் ஆபத்தான பயணங்களையே எதிர்நோக்குவதாக ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் ஸ்பெயினை சென்றடைய முயன்று, 4000 க்கும் அதிகமானவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஸ்பெயின் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.