வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டுமாயின், வெட் வரியை 20 வீதம் முதல் 21 வீதம்வரை அதிகரிக்க நேரிடும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த போதே திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாயின் தற்போது அரசுக்கு இருக்கும் செலவீனத்திற்கு மேலதிகமாக வருடாந்தம் 140 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இருபதாயிரம் ரூபாயால் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் மேலும் 280 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த வருமானத்தைப் பெறுவதற்காக தற்போதைய வருமானத்தை அதிகபட்சமாக நிர்வகித்தாலும், வரிகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், சம்பளத்தை பத்தாயிரம் ரூபாயினால் அதிகரிக்க, வெட் வரி 2 வீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், தொழிற்சங்கங்கள் கோரும் சம்பளத்தை அதிகரிப்பதற்கு 3 வீதத்திற்கும் மேல் வெட் அதிகரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், தற்போது அதை செய்ய இயலாது எனவும் ஏற்கனவே வெட் வரி 18 வீத உச்ச அளவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளால் முன்பு போன்று மத்திய வங்கியினால் பணம் அச்சிட முடியாது என சுட்டிக்காட்டிய திறைசேரி செயலாளர், அவ்வாறு செய்தால் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத் திட்டத்தை வெற்றிககரமாக முன்னெடுக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்கவும் இங்கு கருத்துத் தெரிவித்ததோடு, அரச ஊழியர்களின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிப்பது கடினமான பணியாக இருந்தாலும், அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான ஒதுக்கீட்டை வழங்குவதாக ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையினை அளிக்க விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த சிறிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.