அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை, அந் நாட்டின் உளவுத்துறை உறுதி செய்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு இலக்கான டொனால்ட் ட்ரம் பாதுகாவலர்களின் உதவியுடன் மேடையில் இருந்து வெளியேறியதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், பட்லர் நகரில், குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலேலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதன்போது, தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த டொனால்ட் ட்ரம்ப் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் ட்ரம்பின் வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில், அமெரிக்க பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.