நாடு எதிா்கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்னர் தேசிய ரீதியில் சிந்தித்துச் செயற்படக்கூடிய அரசியல் குழுவொன்று நாட்டுக்கு கிடைத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா்.
அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.
5 வருடங்களில் ஆட்சி மாற்றம் செய்வது குறித்து சிந்திப்பதற்கு மாறாக தேசிய மட்டத்தில் சிந்தித்துச் செயற்படக்கூடிய அரசியல் முறைமையே எதிர்காலத்திலும் நாட்டுக்குத் தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாம் எதிர்காலத்தை எவ்வாறு கட்டியெழுப்ப முடியுமென சிந்திக்க வேண்டும் எனவும் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டிருப்பதால் எதிர்காலத்துக்கான முதல் அடியை வெற்றிகரமாக வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் தற்போது பின்பற்றும் பொருளாதார முறைமைகள் மூலம் முன்னேற்றத்தை அடைய முடியாமையால் ஒரு நாடு என்ற வகையில் மேலும் கடன் படுவதை மாத்திரமே செய்ய முடியும் எனவும் அவ்வாறு செய்தால் பிள்ளைகள் எதிர்பார்க்கும் சிறந்த எதிர்காலமும் கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று இன்னும் 15 வருடங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பதால், நாடாக முன்னோக்கிச் செல்வதா அல்லது மீண்டும் பொருளாதாரம் சரிவடைய இடமளிப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனாலேயே நாட்டின் இறக்குமதி பொருளாதாரத்தை ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்ற எதிர்பார்ப்பதாகவும் நாட்டில் பல முறைமைகள் மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.