பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை விட்டுவிட்டு, அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணத்தை செலவிட்டிருந்தால், இன்று நாடு மிக மோசமான அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிதி ஒதுக்கீட்டின்போது, அன்று தேர்தலை விட பல்வேறு விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியிருந்ததாகவும் சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி முன்னெடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற முன்னாள் தலைவர்களுடான சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் நாட்டை பொறுப்பேற்ற போது நாடு பல நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்ததாகவும் பொருளாதார வீழ்ச்சி மட்டுமன்றி, சட்டமும் அரசியலும் வீழ்ச்சி கண்டாலும் இந்த தேர்தலில் கட்சிகள் தோல்வி அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சவால்களை முறியடித்து நாட்டை படிப்படியாக முன்னேற்றுவதற்கு என்னால் முடிந்துள்ளதாகவும், இந்தப் பயணத்தின் போது எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பின்னணியிலேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வந்ததாகவும் ஆனால் அதற்குப் பணம் ஒதுக்கும் திராணி இருக்கவில்லை எனவும் அந்த தேர்தலுக்குப் பணம் ஒதுக்குவதை விட, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பல விடயங்கள் அன்று இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் அவ்வாறு செயற்படாமல், பொருளாதார அபிவிருத்தியை ஒதுக்கிவிட்டு தேர்தலை நடத்தி இருந்தால், இன்று இந்த நாட்டுக்கு ஏற்படும் அவல நிலையை நான் கூற வேண்டியதில்லை எனவும் அப்படிச் செய்தால் நாடு அன்று இருந்த நிலையிலிருந்து மீள முடிந்திருக்குமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சவால்களை வெற்றிகொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வலுவான அடித்தளத்தில் முன்னோக்கி கொண்டு வந்துள்ளதால் இன்று மக்கள் கையில் பணம் இருப்பதாகவும் இந்நாட்டில் அவதியுறும் சாதாரண மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் உள்ளிட்ட கட்சிகள் கடந்த ஆறு மாதங்களாக ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களை செய்து வருகின்றதாகவும் அந்த கட்சிகள் ஒரு வருடமாக அதற்காக பாடுபடுவதுடன் நாம் உரிய நேரத்தில் பணிகளை ஆரம்பிப்போம் எனவும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.