பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டின் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சீர்குலைக்காமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற்றுவதற்கான காலம் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு பூனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அன்று இருந்தது போன்று இன்று பல்கலைக்கழகங்கள் இல்லை என்பதுடன் இன்று பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் குழுக்கள் உள்ளதாகவும் அந்தக் குழுக்கள் ஒரு சர்வாதிகாரத்தைப் போல மாணவர்களைக் கையாள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களை பட்டங்களை விற்கும் கடைகள் என்ற கேவலமான பேச்சுக்கு நாம் செவிசாய்க்கக் கூடாது எனவும் பிள்ளைகள் சுதந்திரமாக கல்வி கற்கும் வகையில் இந்நாட்டில் உள்ள பல்கலைக்கழக முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாளை முதல் சமூக வலைதளங்களில் இதனைச் சொல்லி என்னைக் குறை கூறலாம் எனவும் பல்கலைக்கழகத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகக் கட்டமைப்பில் இருந்து அச்சுறுத்தும் அரசியலை அகற்ற வேண்டும்; எனவும் பல்கலைக்கழகத்திற்குள் தங்களுக்கு விருப்பமான கற்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நமது பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சீர்குலையாமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.