பாலஸ்தீன பகுதியை பல்லாண்டு காலமாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது சட்டவிரோதம் என்றும் அது விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐ.நாவின் அனைத்துலக நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தத் தீர்ப்பு அறிவுரையாக வழங்கப்படும் ஒன்று. ஏனெனில், அனைத்துலக நீதிமன்றத்தின் இந்தப் பிரகடனம் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது.
அனைத்துலக நீதிமன்றத்தின் இந்தப் பிரகடனத்தை பொய்களின் அடிப்படையிலான ஒன்று என்று இஸ்ரேல் வர்ணித்தது. ஆனால், அதையே பாலஸ்தீன அமைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதத்தால் உலக அளவில் கவலை அதிகரித்து வரும் நிலையில்,அனைத்துலக நீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரை வெளியாகியுள்ளது.
இதேவேளை, பாலஸ்தீன நகரமான காசாவின் பல்வேறு இடங்களில் நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.