நாட்டிலுள்ள பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் 16 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கொவிட் தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்ட போராட்டத்துடன், இந்த நாட்டில் உள்ள ஏனைய எல்லா துறைகளைப் போலவே,
கல்வித் துறையும் பாரிய நெருக்கடியை சந்தித்தது.
வீழ்ந்த நாட்டை மீட்கும் பொறுப்பை வேறு யாரும் பொறுப்பேற்காத நிலையில்,
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கம் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
அப்போது காணப்பட்ட நிலைமையை மாற்றி இரண்டு வருடங்களுக்குள் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கம் செயற்பட்டது. எனவே, இந்த நேரத்தில், நாட்டின் அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் நினைவு கூர வேண்டிய தேவை உள்ளது.
நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை 100 வீதம் வழங்குவதாக சீன அரசாங்கம் அமைச்சுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்களை பிரதேச களஞ்சியங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும். பிரதான மற்றும் தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.
இதன் மூலம் 17 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு கடந்த காலத்தில் நிறுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது பல்கலைக்கழக கட்டமைப்புக்கும் நிர்மாணத் துறைக்கும் மிகவும் முக்கியமானது என்பதைக் கூற வேண்டும்” இவ்வாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.