அக்னி ஏவுகணையின் தந்தை, கல்வியாளர், கவிதை ஆற்றல் மிக்கவர், நூலாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவராக விளங்கிய ,முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பேக்கரும்பில் அமைந்து உள்ள தேசிய நினைவிடத்தில் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர், கட்சி முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம், உலகமறிந்த விஞ்ஞானியாக உயர்ந்தார். அக்னி நாயகனான அவரின் திறமையை பாராட்டி இந்திய நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற கலாம், மாணவர்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். இந்நிலையில் கடந்த 2015 இதே நாளில் மறைந்தார்.
இதையடுத்து ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பு வில் கலாம் தேசிய நினைவிடம் கட்டப்பட்டது அதனை இந்திய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலர் கலாம் நினைவிடத்தை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கலாமின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று காலை கலாம் குடும்ப உறுப்பினர்கள் கலாம் தேசிய நினைவகத்தில் உள்ள அப்துல் கலாம் சமாதியில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் அடுத்தடுத்து கலாமின் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக கலாம் குடும்பத்தினர் நடத்திய சிறப்பு பிரார்த்தனையில் பாஜக தேசிய சிறுபான்மையினர் தலைவர் ஜமால் சித்திக் மற்றும் தேசிய சிறுபான்மையினர் செயலாளர் வேலு இப்ராஹிம் மற்றும் பாஜகவினர் கலந்து கொண்டனர்.